சகோதரருக்கு ஏற்பட்ட மூளைக் காயம், ஏழாம் வகுப்பு மாணவி அலேகா கோல்ட்பெர்க்கின் மனதில் ஓர் அறிவியல் கேள்வியை விதைத்தது. அதற்குப் பதில் தேடி, 350 பழ ஈக்களுடன் அவர் மேற்கொண்ட பரிசோதனை, தேசிய அறிவியல் போட்டியின் இறுதிச் சுற்றுவரை அழைத்துச் சென்றிருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அலேகாவின் சகோதரர், தலையில் கடுமையாகக் காயமடைந்தார். அதன் பிறகு நினைவாற்றல் குறைவு, சிந்திப்பதில் சிரமம் என அவரது அன்றாட வாழ்க்கையே மாறியது. இதை அருகிலிருந்து பார்த்த அலேகாவுக்கு, ‘இந்தப் பாதிப்புகளைக் குறைக்க முடியாதா?’ என்ற கேள்வி எழுந்தது.
விடை தேடியவர், மரபியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் பழ ஈக்களைத் தேர்ந்தெடுத்தார். மூளைக் காயத்தின் பாதிப்புகளைக் குறைக்கக்கூடும் எனக் கருதப்படும் ‘மெத்திலீன் ப்ளூ’ வேதிப்பொருளை வெவ்வேறு அளவுகளில் வழங்கி, ஈக்களின் உயிர்வாழ்வையும் இயக்கத்தையும் ஒப்பிட்டார்.
பரிசோதனையில், அதிகபட்ச அளவைப் பெற்ற காயமடைந்த ஈக்கள், மற்ற குழுக்களைவிட உயிர்வாழ்வதிலும் மேலே ஏறுவதிலும் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈக்களின் ஏறும் திறனை, அவற்றின் இயக்கச் செயல்பாட்டை மதிப்பிடும் அளவுகோலாக அவர் பயன்படுத்தினார்.
இந்த முயற்சி, 2026ஆம் ஆண்டுக்கான ‘தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் ஜூனியர் இன்னோவேட்டர்ஸ் சேலஞ்ச்’ போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 30 திட்டங்களில் இடம்பிடித்தது.
எனினும், பழ ஈக்களில் கிடைத்த முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. இது ஆரம்பநிலை ஆய்வே. மனிதர்களுக்கான சிகிச்சையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு பாதுகாப்பு, சரியான அளவு, செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விரிவான ஆய்வுகள் தேவை.
குடும்பத்தின் வேதனையை ஓர் ஆராய்ச்சிக் கேள்வியாக மாற்றியிருக்கிறார் அலேகா. அவரது முயற்சி உடனடியாகச் சிகிச்சையை வழங்கிவிடாது; ஆனால், அன்புக்குரியவரின் துயரத்திலிருந்து பிறந்த கேள்வி, அறிவியலின் கதவைத் திறந்திருக்கிறது.